தலைப்புச் செய்திகள்
செய்தி ஓட்டம்
WELCOME
புதிய இடுகைகள்
News scroll
புதிய செய்தி
புதியன
அதிகரித்து வரும் தனிப் பயிற்சிப் போக்கு
தமிழகத்தில் எல்.கே.ஜி. முதல் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகளையும் தனிப் பயிற்சிக்கு (டியூசன்) அனுப்பும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகளின் இயல்பான திறமை, தனித்தன்மை, பொதுவான வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில், சுமார் 37,000 தொடக்கப் பள்ளிகள், 23,000-க்கும் மேற்பட்ட தனியார் மழலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் லட்சக்கணக்கான குழந்தைகள் எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை பயில்கின்றனர். பள்ளிகள் அனைத்தும் வீட்டுப் பாடங்களை ஏராளமாகக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
குறிப்பாக, தனியார் பள்ளிகள் எழுத்துப் பயிற்சிக்காக ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு வீதம் கொடுத்து விடுகின்றன. இதுபோன்ற வீட்டுப் பாடங்களைக் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உதவியுடன் செய்து முடித்தும் விடுகின்றனர்.
விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சிரமப்பட்டு தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். ஆனால், அங்கு பள்ளியில் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களைத் தங்களால் கற்பித்து வழிநடத்த இயலாத சூழல் அவர்களிடம் நிலவுகிறது. இதனால், தங்கள் பிள்ளைகள் வீட்டுக்கு வந்தும் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். காலை மாலை இரு வேளைகளிலும் தனிப் பயிற்சிக்கு அனுப்புகின்றனர். படிப்பறிவுள்ள, வசதியான வீட்டுக் குழந்தைகளுக்குக்கூடச் சொல்லித்தர அவர்களது பெற்றோர்களுக்குப் போதிய நேரமின்மை காரணமாகவும் தனிப் பயிற்சிக்கு அனுப்புவது நடைமுறையில் உள்ளது. சொல்லித்தர வாய்ப்பும் சூழலும் இருந்தாலும், பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை ஏமாற்றிவிட்டுப் படிக்காமல் இருந்து விடுகின்றனர்.
தனிப் பயிற்சிக்கு அனுப்புவதில் கூலித் தொழிலாளர்கள், படித்த வசதியானவர்கள் என்று எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. பெற்றோர்கள் மாலை நேர டிவி தொடர்களுக்கு அடிமையாகிவிட்டதும், பிள்ளைகளைத் தனிப் பயிற்சிக்கு அனுப்புவதற்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் இன்று எல்.கே.ஜி முதல் தனிப் பயிற்சி கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால், அந்தந்தப் பகுதிக்கு ஏற்றவாறு (கிராமம், நகரம், மாவட்டத் தலைநகரம்...) 30 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. இதுபற்றி குழந்தைகளைத் தனிப் பயிற்சிக்கு அனுப்பும் பெற்றோர்கள் சொல்வது என்ன?
"பள்ளிகளில் தரப்படும் வீட்டுப் பாடங்களை, எங்களிடம் ஏதாவது காரணம் கூறிவிட்டு எழுதுவதைத் தாமதப்படுத்துகின்றனர். இல்லையெனில், எழுதாமல் விட்டுவிடுகின்றனர். ஆனால், தனிப் பயிற்சிக்கு அனுப்பும்போது, அங்கு பள்ளிகளில் தரப்படும் அனைத்து வீட்டுப் பாடங்களையும் முடித்துவிட்டு வருகின்றனர். குழந்தையின் கல்வித் தரத்தையும் எங்களால் அவ்வப்போது தெரிந்து கொள்ள முடிகிறது. தனிப் பயிற்சிக் கட்டணம் பற்றிக் கவலைப்படுவதில்லை.
மேலும், பள்ளி வகுப்புகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கு பாடப்பிரிவு வேளைகளில் வரும் ஆசிரியரால் ஒரு தனிப்பட்ட ஒரு குழந்தையின் தனித்திறன்களை வளர்க்கப் போதுமான நேர அவகாசம் இருப்பதில்லை. இதனால், தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறோம்' என்கின்றனர்.
பள்ளிகளில் தரப்படும் வீட்டுப் பாடங்களை விரைந்து முடிக்கவும், தங்களது பிள்ளைகள் தங்கள் பேச்சைக் கேட்க மறுப்பதாலும் எங்களிடம் தனிப் பயிற்சிக்குக் குழந்தைகளை அனுப்புகின்றனர் என்கின்றனர் ஆசிரியர்கள்.
"தனிப் பயிற்சிக்குச் செல்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதும், பிள்ளைகள் பெற்றோரின் பேச்சைக் கேட்க மறுப்பதும் அதிகரித்து வருவது ஆரோக்கியமான சூழலுக்கு உகந்தது அல்ல. பகல் முழுவதும் பள்ளியில் கழித்துவிடும் குழந்தைகள், காலை, மாலை இரு வேளையும் 2 மணி நேரம் தனிப் பயிற்சிக்குச் செல்வது, குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, தனித்தன்மை, தன்னம்பிக்கை எல்லாவற்றையும் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கல்வி மேம்பாட்டு அறிக்கை 2009-இல், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் (எல்.கே.ஜி. முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளில் 28 சதவிகிதம் பேரும், அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் (1ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ) 16 சதவிகிதம் பேரும் தனிப் பயிற்சிக்குச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளது. இது, 2007-ஆம் ஆண்டில் இருந்ததைவிட 10 சதவிகிதம் கூடுதலாகி உள்ளது. எனவே, பெற்றோர்கள் முடிந்த அளவு தனிப் பயிற்சிக்குச் செல்லும் நேரத்தைக் குறைக்க முயற்சித்து, குழந்தைகளுக்குப் பிற பொழுதுபோக்கு, விளையாட்டு, இசை போன்றவற்றிலும் செலவிட குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்களது சுயமான திறமை எதில் அதிகமாக வெளிப்படுகிறது என்று கண்டறிய வேண்டும். பிறகு, அவற்றில் குழந்தைகளை ஊக்கப்படுத்தி வளர உதவிட வேண்டும்' என்பது அனுபவம் வாய்ந்த மூத்த ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.
பெற்றோர்கள் இவற்றை மனதில்கொண்டு, தங்களது பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, நாளைய தலைமுறை சிறந்து விளங்க உதவ வேண்டும்.
CourtesY: Dinamani
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment